மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 10-ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்த 25 வயது ஆட்டோ டிரைவர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, கடந்த புதனன்று மனேவாடா அருகே உள்ள ஓம்கார் நகரில் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. அன்று, பள்ளியிலிருந்து சிறுமியை வழக்கமாக வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் வந்தார். சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட டிரைவர், திடீரென ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார்.
அப்போது அந்த இடத்திலிருந்து தொலைவிலிருந்த தம்பதியினர் அதை வீடியோ எடுத்து போலீஸுக்கு அனுப்பினர். அந்த விடீயோவைப் பார்த்த போலீஸார், ஆட்டோ எண் தெரியவில்லை என்றாலும்கூட, ஆட்டோவின் அடையாளத்தை வைத்துக் கண்டுபிடித்தனர். பின்னர், போலீஸ் விசாரணையில், அந்த நபரும் தான் செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரிடம் போலீஸ் இதனைத் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆட்டோ டிரைவர் தெரிந்தவர் என்பதால் அவர்மீது புகாரளிக்கவில்லை.
இருப்பினும், போலீஸார் தாமாக முன்வந்து இதில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி லக்ஷ்மன் கேந்த்ரே, “சிறுமியின் பெற்றோரை அழைத்து விஷயத்தை நாங்கள் சொன்னபோது அதிர்ச்சியடைந்தனர். அதோடு, அந்த ஆட்டோ டிரைவர் வழக்கமாக தங்களின் மகளை அழைத்துச் சென்று வருபவர் என்றனர். ஆனால், இதுவரை அவர்கள் முறையான புகார் அளிக்கவில்லை.
பெற்றோர் புகார் அளிக்காவிட்டாலும், நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறோம். டீன் ஏஜ் குழந்தைகளைப் பெற்றோர் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற வழக்குகளில் பெற்றோர்கள் புகார் வேண்டும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார். மேலும், அந்த நபர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.