பெங்களுரூ,
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 59 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி நடந்த 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்கிறது. டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக பண்ட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 3-வது முறையாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ரிஷாப் பண்ட் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் ரூ.30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.