அமராவதி: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. அதேநாளில் ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகள், 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் அந்த மாநிலத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக – தெலுங்கு தேசம் – ஜன சேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை நிலவுகிறது.
ஆந்திராவில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இறுதி நாளில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் மற்றும் சித்தூரில் பிரச்சாரம் செய்தார். கொட்டும் மழையிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அவர் போட்டியிடும் பிட்டாபுரம் தொகுதியிலும், காக்கிநாடா தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.
பாஜக தலைவர் ஜேபி நட்டா திருப்பதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி,ஒய்.எஸ். ஷர்மிளாவுடன் இணைந்து கடப்பாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவரான நடிகை ரோஜா, நகரி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
ஒடிசா தேர்தல்: ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
ஆளும் பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பிஜு ஜனதா தளம், பாஜக இடையே போட்டி கடுமையாக உள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 28 தொகுதிகளில் 21 தொகுதிகள் தற்போது பிஜு ஜனதா தளம் வசம் உள்ளன. 4 பாஜகவிடமும் 3 தொகுதிகள் காங்கிரஸிடமும் உள்ளன.