ரியாசி: ஜம்மு காஷ்மீரில் 500 வருட பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்த் காஷி கவுரி சங்கர் கோயில் அமைந்துள்ளது. 500 வருட பாரம்பரியமிக்க இந்த கோயிலுக்கு முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில், அந்தக் கோயிலுக்கு செல்வதற்கான பாதை அமைப்பதற்காக குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகிய இரு முஸ்லிம்கள் தங்களுக்கு சொந்தமான ரூ.1 கோடிமதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
இது குறித்து குலாம் ரசூல் கூறுகையில், “500 வருட பாரம்பரிய கோயிலுக்கு செல்ல நல்ல பாதை இல்லை. இதை வைத்து சிலர் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மத ரீதியான பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்தப்பிளவைத் தடுத்து மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் எங்கள் நிலங்களை தானமாக வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கேரல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், குலாம் ரசூலும் குலாம் முகம்மதும் தங்கள் நிலங்களை வழங்கினர்.
இந்த நிலத்தில் 1200 மீட்டர் நீளம் மற்றும் 10 அடி அகலத்தில் சாலை அமைக்கப்படும் என்றனர்.