சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழக டிஜிபி-யை அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில அரசுதலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரை அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை முறையாக பின்பற்ற தவறுபவர்களின் ஜாமீனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான குற்றச்சம்பவங்களில் உரியகாலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில், குற்றவாளிகள் எளிதாக ஜாமீன் பெற்று விடுகின்றனர். இதைத் தடுக்க உரிய காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல சாட்சிகளை கலைப்பவர்கள், சட்டத்துக்கு புறம்பாகசெயல்படுபவர்களின் ஜாமீனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.