துலே (மகாராஷ்டிரா): பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அடிமைகள் போல நடத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் துலே தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ ஷோபா பச்சாவ்வை ஆதரித்து நடந்த பிரச்சார பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள், சுதந்திரத்துக்கு முன்பாக ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்கள். மோடி மற்றும் அமித் ஷாவுக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு கொடுத்தால் அதே நிலைமை மீண்டும் ஏற்படும். நாம் மீண்டும் அடிமைகளாக்கப்படுவோம்.
உங்களின் நலனுக்காவவும் உங்களின் சொந்த மக்களின் நலனுக்காவும் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது.
அரசியலமைப்பு இல்லை என்றால் உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்று கூறினார். பின்னர் பல பாஜக எம்.பி.க்களும், அக்கட்சியின் தலைவர்களும் அது போன்ற பேசினர்.
மோடி தொடர்ந்து பொய் பேசி வருகிறார். வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை நாட்டுக்கு திருப்பிக் கொண்டுவருவேன் என்று அவர் சூளுரைத்தார் (chest-thumped). ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு வருடமும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று தெரிவித்தார்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பதிலாக அவரது தவறான கொள்கைகள் காரணமாக விவசாயிகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்” என்று பேசினார்.
மகாராஷ்டிராவின் வடக்கே உள்ள துலே தொகுதியில் வாக்குப்பதிவு ஐந்தாம் கட்ட தேர்தல் நாளான மே 20-ம் தேதி நடக்க இருக்கிறது. இங்கு பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே களமிறக்கப்பட்டுள்ளார்.