திருவண்ணாமலை அருகே கார் விபத்து: அமைச்சர் எ.வ.வேலு மகன் உட்பட 4 பேர் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த கார் விபத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று (மே 12) பிற்பகல் கார் ஒன்று வந்துள்ளது. பிரகாஷ் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் – கடலூர் தேசிய நெடுஞ்சாலை) நான்குமுனை சந்திப்பின் ஒரு பகுதியை கடந்து, மற்றொரு பகுதியை கடக்க முயன்றது. இதேபோல், திருக்கோவிலூர் மார்க்க சாலையில் இருந்து வந்த சொகுசு காரும், நான்குமுனை சந்திப்பை வேகமாக கடக்க முயன்றுள்ளது. அப்போது சொகுசு காரின் நடுபகுதி மீது, விழுப்புரம் மார்க்க சாலையில் இருந்து வந்த கார் மோதியது. இதில், சொகுசு கார் உருண்டு பலத்த சேதமடைந்தது. இக்காரின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதேபோல், விழுப்புரம் மார்க்க சாலையில் இருந்த காரின் முன் பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் சொகுசு காரில் பயணம் செய்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன், அவரது கார் ஓட்டுநர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் மீட்கப்பட்டு, தென்மாத்தூரில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல், விழுப்புரம் மார்க்க சாலையில் இருந்து வந்த காரில் பயணித்த சென்னை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தி (62) காயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் அமைச்சர் மகனின் காரில் இருந்த பதிவு எண்கள் அகற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலு மகன் சென்ற காரில் இருந்த பதிவு எண் அகற்றப்பட்டுள்ளது

தென்மாத்தூரில் உள்ள தனது கல்லூரி வளாகத்தில் இருந்து திருவண்ணாமலை நகரம், திண்டிவனம் சாலையில் உள்ள வீட்டுக்கு காரில் அமைச்சர் மகன் கம்பன் சென்றபோது, விபத்தில் சிக்கி உள்ளார். திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய 2 கார்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அமைச்சர் மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியபோது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் சிக்கிய மற்றொரு காரின் முன் பகுதி நொறுங்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.