பாட்னா: மக்களவை தேர்தல் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிஹாரில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 40.3% வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பிஹார் சென்றுள்ளார். அங்கு, (திங்கட்கிழமை) இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார்.
குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருடன் பிரதமர் பாட்னாவில் பிரம்மாண்டமான ரோடு ஷோவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.