கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் மீது 7 வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீஸார், அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி போலீஸார் சவுக்கு சங்கரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, சவுக்கு சங்கரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை சைபர் கிரைம் போலீஸார் கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை (மே 14) மாலை 5 மணி வரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின்போது, சவுக்கு சங்கரின் வழக்கறிஞரை சந்திக்கவும் நீதிபதி அனுமதியளித்துள்ளார். மேலும், கோவை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனு நாளை (மே 14) விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் இந்த விசாரணை நடைபெறும் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.