டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
அவர், ஜாமீனில் வெளிவருவதற்கான வெளிச்சம் தெரிய ஆரம்பித்தவுடன், அவரை வேறொரு வழக்கில் சிக்கவைத்து, சிறைக்குள்ளேயே வைப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக செய்திகள் பரபரத்தன. ஆனாலும், இடைக்கால ஜாமீனில் அவர் வெளியே வந்துவிட்டார்.
வெளியே வந்த பிறகு அவர் தெரிவித்த அதிரடியாக சில கருத்துக்கள், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஜாமீன் கிடைத்த மறுநாள், டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, “உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?’ என்று ’இந்தியா’ கூட்டணியைப் பார்த்து கேட்கிறார்கள். பா.ஜ.க-வைப் பார்த்து நான் கேட்கிறேன்… ‘உங்களுடைய பிரதமர் யார்?” என்று அதிரடி கேள்வியை எழுப்பினார்.
மேலும், “மோடிக்கு அடுத்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி 75 வயது ஆகப் போகிறது. அவர், 2014-ம் ஆண்டிலிருந்து பிரதமராக இருக்கிறார். பா.ஜ.க-வில் 75 வயததை அடைந்தவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப் பதவியும் கிடையாது என்ற விதியை பா.ஜ.க வகுத்துவைத்திருக்கிறது.எனவே, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்க விரும்புகிறேன்” என்றார் கெஜ்ரிவால்.
‘இந்தியா’ கூட்டணியில் 28 கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், ‘உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா?’ என்ற கேள்வியை பா.ஜ.க-வினர் தொடர்ந்து எழுப்பிவருகிறார்கள். ‘அதற்கு, இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும், ‘எங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்வோம்’ என்று பதில் சொல்லிவருகிறார்கள்.
ஆனாலும், இந்தக் கேள்வியை தங்கள் பிரசாரத்தில் பா.ஜ.க-வினர் தொடர்ந்து எழுப்பிவரும் நிலையில், ‘இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள்’ என்ற விமர்சனத்தை பிரதமர் மோடி முன்வைத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். “மோடி தனக்காக வாக்கு கேட்கவில்லை. அமித் ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார். ‘மோடி வாக்குறுதி‘களை (Modi guarantee) நிறைவேற்றப்போவது யார் என்ற கேள்வியை அமித் ஷா, மோடி ஆகிய இருவரிடமும் நான் கேட்கவிரும்புகிறேன்.
மோடி வாக்குறுதிகளை அமித் ஷா நிறைவேற்றுவாரா? அவர்கள் (பா.ஜ.க) ஆட்சியமைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கப் போகிறவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் வாக்களிக்கப்போவது மோடிக்கு அல்ல, அமித் ஷாவுக்குத்தான் நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்” என்றார்.
“இப்படியொரு கருத்தைத் தெரிவித்து பா.ஜ.க ஆதரவு வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கெஜ்ரிவால். ஏனெனில், வேலையில்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களை தாண்டி, மோடிக்காக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் வடமாநிலங்களில் அதிகம். அவர்களைக் குறிவைத்துத்தான், கெஜ்ரிவால் இப்படிப் பேசியிருக்கிறார்” என்கிறார்கள் தேசிய அரசியலை உற்று கவனிக்கும் அரசியல் நோக்கர்கள்.
மேலும், “ஒரே தலைவர் என்ற ஆபத்தான ஒரு திட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்திருக்கிறார். இந்தத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றார் கெஜ்ரிவால்.
பா.ஜ.க தலைவர்களையும் அதிரவைக்கிற சில கருத்துக்களை கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். அதாவது, பா.ஜ.க-வில் இருக்கும் தலைவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் என்பது போன்ற கருத்தையும் கெஜ்ரிவால் பேசியிருக்கிறார். ‘எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், வசுந்தராஜே சிந்தியா, ரமன் சிங், மனோகர்லால் கட்டார் ஆகியோரை அரசியலில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்கள்.
அதேபோல, இப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்போகிறார்கள். இப்போது நான் சொல்வதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.க வெற்றிபெற்றால், இரண்டே மாதங்களில் உ.பி-யில் முதல்வரை மாற்றிவிடுவார்கள். யோகி ஆதித்யநாத்தின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும். இது சர்வாதிகாரம்” என்றார் கெஜ்ரிவால்.
இந்தநிலையில் பாஜக-வினர் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், `பிரதமர் மோடி அரசியலில் நம்பகத்தன்மையின் சின்னமாக இருக்கிறார். ஆனால் கெஜ்ரிவால் நேரெதிராக இருக்கிறார்’ என்றார். மேலும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். அவர் 75 வயதை கடந்தாலும் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்றார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் பதவியில் இருந்து மோடியை மாற்றும் திட்டம் எதிவும் இல்லை. இதனை நான் ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டேன்” என்கிறார். கெஜ்ரிவாலின் இந்த பேச்சு பாஜக தரப்பிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88