செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேளாண் துறையிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் , ஹைதராபாத்தில் இயங்கும் இக்ரிசாட் எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அரை வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (Icrisat) பயிர்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்யச் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாதிரியுடன் `NIRS’ எனப்படும் பாக்கெட் அளவுள்ள சிவப்பு நிற சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதை செல்போன் போன்றே பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லலாம்.
பொதுவாகவே தானியங்கள் மற்றும் தீவனங்களின் ஊட்டச்சத்து தரத்தை மதிப்பிட பல வாரங்கள் வரை எடுக்கும். மனிதர்கள் அல்லது தானியங்கி செயல்முறைகள் மற்றும் ஆய்வக கருவிகள் மூலமாக அதன் தரம் மதிப்பிடப்படுகிறது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள சாதனம் செலவு குறைந்தவை மற்றும் ஒரு நாளைக்கு 150 மாதிரிகளுக்கு மேல் விரைவாக மதிப்பீடு செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பயிர்கள் ஆரோக்கியமாக உள்ளதா, இல்லையா என்பதையும் இதில் அறியலாம்.
இது குறித்து இக்ரிசாட் டைரக்டர் ஜெனரல் ஜாக்குலின் டி ஆரோஸ் ஹியூஸ் கூறுகையில், “விவசாயிகளின் வயல்களில் ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்கியாக இந்த கருவி செயல்படும். ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களின் விநியோகத்திற்கான தர உத்தரவாதத்தை வழங்குவதே எங்கள் குறிக்கோள்” என்று கூறியுள்ளார்.