நாட்டில் ஆரம்பப்பரிவில் கல்வி பயிலும் சகல மாணவர்களையும் உள்ளடக்கிய 17 இலட்சம் மாணவர்களுக்காகவும் ரூபா 26 பில்லியன் ஒதுக்கப்பட்டு பாடசாலைகளில் பகலுணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்தும் முன்நடாத்திச் செல்லும் பின்னணியில், சிலர் அரசியல் மேடைகளில் இருந்து அறிவிப்புக்களை விடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாட்டின் சகல பாடசாலைகளிலும் பகலுணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கும் அரசியல் வாதிகள் அது குறித்து, புள்ளிவிபர ஆய்வொன்றை செயன்முறை ரீதியாக மேற்கொண்டு இவ்வறிவித்தல்கள் விடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜேர்மன் தொழில்நுட்க் கல்யலூரியில் நிருமாணிக்கப்பட்ட ஒன்பது மாடி விடுதிக் கட்டடத் தொகுதியை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்..
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் முன்னேற்றகரமான நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பாரிய அர்ப்பணிப்புக்கள் வழங்க வேண்டியிருந்தது. தினமும் 14 மணி நேர மின்துண்டிப்புடன் எரிபொருள் வரிசை யுகத்துடன் நாட்டு நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தைப் முடிவுறுத்தி ஜனநாயகப் பொறிமுறையை மீளக்கட்டியெழுப்ப முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஜனநாயகப் பொறிமுறையை மீட்டெடுக்கும் போது அதன் பெறுமதி பலருக்குப் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களாக மாறிய முன்னாள் வித்யோதயா, வித்யாலங்கார பிரிவாக்களுக்குப் பின்னர், சித்திரவதை மையங்களாகப் பயன்படுத்தப்பட்ட காலகட்டம் இருந்ததாகவும், அதனை தற்போதைய இளைஞர் தலைமுறையினர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
பாரிய முயற்சியின் பின்னர் உருவாகியுள்ள தற்போதைய சமூக நிலைமையை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்திய அமைச்சர், அதற்காக மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.