உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று பெய்த கனமழையால் அங்குள்ள மத்தள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடுமலையின் தெற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலை தொடரில் ஏராளமான சிற்றோடைகள் உள்ளன. மழைக்காலங்களில் சேகரமாகும் மழை நீர் தாழ்வான இடங்களை நோக்கி பாய்வது வழக்கம். திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, நல்லார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ள நீர் வடியும் வகையில் பல்வேறு ஓடைகள் உள்ளன. அவ்வாறு ஓடைகளுக்கு வரும் நீரினை தடுத்து ஆங்காங்கே தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அதன் மூலம் அப்பகுதியில் பிஏபி பாசனம் இல்லாத ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பயனடைந்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் அப்பகுதியில் வறட்சியான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. காண்டூர் கால்வாயை ஒட்டிய மத்தள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகி ஜெகதீசன் கூறியது: “சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மழை நீர் தடுப்பணைகளில் சேகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுவட்டார விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஏற்கெனவே இதேபோல கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் 1000 அடி தொலைவில் உள்ள விவசாய கிணறுகளுக்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இதுபோல மழைக்காலங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும். நீரின்றி அமையாது உலகு என்ற வரிகளுக்கு ஏற்ப கால நிலை மாற்றமும் அதனால் ஏற்படும் அதீத வெப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிக்க தண்ணீர் தான் ஆதாரம், இதனை விவசாயிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம்” என்றார்.