வாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி

வாரணாசி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார்.

இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், வாரணாசி நகரில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணியில் ஈடுபட்டார்.

அவர், வாகன பேரணியை தொடங்குவதற்கு முன் லங்கா பகுதியில் மாளவியா சவுராஹா என்ற இடத்தில் உள்ள, கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினார். இதன்பின்பு வாரணாசியில் அவர் வாகன பேரணியில் கலந்து கொண்டார்.

இந்த பேரணியில், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் உடன் சென்றார். இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவி உடை அணிந்த பெண்கள் வாகனத்தின் முன்னே நடந்து சென்றனர். ஏறக்குறைய 6 கி.மீ. தொலைவுக்கு இந்த வாகன பேரணி நடைபெற்றது.

வாகன பேரணியானது, காசி விஸ்வநாத் தம் பகுதி வரை நடைபெறும். சந்த் ரவிதாஸ் கேட், அஸ்சி, சிவாலா, சோனார்புரா, ஜங்கம்பதி மற்றும் கடவுலி ஆகிய பகுதிகளையும் கடந்து செல்லும். இதேபோன்று, கங்கையாற்றில் பிரதமர் மோடி நீராடுவார் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.