மும்பை புழுதிப் புயல் பேனர் விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 59-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பையின் காட்கோபர் பகுதியில் விபத்து நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். க்ரேன் உதவியுடன் ராட்சத பேனர் அகற்றப்பட்டு, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். மும்பையில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

புழுதிப் புயல்: மும்பை மாநகரில் மாலை 3 மணி அளவில் 40 – 50 கி.மீ வேகத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. மும்பையின் காட்கோபர் பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று அங்கிருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. அதன்படி நடந்த மீட்புப் பணிகளில் இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 8 பேர் உயிரிழந்தனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட 59 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

கடுமையான புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தின் விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. புழுதிப் புயலால் நகரின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதற்கிடையே, தொடர்ந்து மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.