முசாபர்பாத்: பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று நான்காவது நாளை எட்டியது.
கோதுமைமாவு விலைஉயர்வு, மின்கட்டண ஏற்றம் ஆகியவற்றை கண்டித்து அவாமி செயற்குழு தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் மக்கள் திரளாக ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடி வந்தவர்களைக் கலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இறங்கினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்புபடை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
வன்முறைக்கு இடமில்லை: இதையடுத்து அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி முழுவதும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது, கடைகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: தற்போது நிலவும் பதற்றமான சூழல் கவலை கொள்ளச் செய்கிறது. இத்தகைய குழப்பமும் கருத்து வேறுபாடும் நிறைந்த சூழலை தங்களது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர் இருக்கவே செய்கின்றனர். ஆனால், சட்டம்ஒழுங்கு பிரச்சினையும் வன்முறையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களின் மின்சாரத்துக்கு வரிவிலக்கு மற்றும் கோதுமை மாவுக்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்தால் போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.