சென்னை / திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம்.செல்வராஜ்(67) சென்னையில் நேற்று காலமானார்.
நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 3-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை மற்றும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2.40 மணிக்கு காலமானார். செல்வராஜின் உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சித்தமல்லி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் கிராமத்தில் வசித்து வந்த ஏழை விவசாயி முனியன் – குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16-ம் தேதி அவர் பிறந்தார். விவசாயிகள் இயக்கத்தில் முனியன் – குஞ்சம்மாள் குடும்பமும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், அவரும் சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அவர் கட்சியில் படிப்படியாக உயர்ந்தார்.
வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட சித்தமல்லி எஸ்.ஜி. முருகையனின் மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்றார். இத்தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். 1989-ம் ஆண்டு நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்ற அவர், தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடினார்.
சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு, சகோதரி சாரதாமணி சிறுநீரக தானம் செய்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மக்கள் ஊழியரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது.
அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அஞ்சலியும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகப்பட்டினம் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செல்வராஜ் இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் கூடிய பணியினை செய்தவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்தார்.
இதேபோன்று, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட்ட தலைவர்களும் இரங் கல் தெரிவித்துள்ளனர்.