சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதியளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா குறித்து பேசியதை குறிப்பிட்டார். ஆனால், அப்போது முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு பேசவில்லை என்று பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சேலத்தை சேர்ந்த வி.பியூஷ் என்பவர் அண்ணாமலை, இதுபோன்ற தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
முன்னதாக அவர், இதுகுறித்து சேலம் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததுடன், சேலம் நீதித்துறை நடுவர் மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அத்துடன்,ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து, இப்பொருள் குறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர்தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில் கடந்த ஏப். 25-ம் தேதி தமிழகபொதுத்துறை செயலர் கே.நந்தகுமார் அரசாணை ஒன்றை பிறப்பித்தார்.
அதில், அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த அரசாணையின்கீழ், வழக்கம்போல் அரசாணைகளில் இடம்பெறும் ஆளுநரின் ஆணைப்படி என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகைவெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தமிழக ஆளுநரால் அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து, ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், இது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை ’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.