மும்பையில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நகரம் முழுவதும் புழுதிக்காற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றிய பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. புறநகர் ரயில், மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதோடு மும்பை விமான நிலைய சேவையும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டு விமான சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் 15 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
அந்தேரி மற்றும் ஆரே இடையே மெட்ரோ ரயில் மின் வயரில் விளம்பர பலகை ஒன்று விழுந்ததால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. முலுண்ட் மற்றும் தானே இடையே புறநகர் மின்சார ரயில் மின்கம்பம் சூறாவளி காற்று காரணமாக வளைந்துவிட்டது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் நகர் முழுவதும் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன.
சூறாவளி காற்றால் காட்கோபர் பந்த்நகரில் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையில் பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அருகில் இருந்த ராட்சத விளம்பர போர்டு மேலிருந்து விழுந்தது. பெட்ரோல் பம்ப் அருகில் ஒரு ஷெட் கட்டப்பட்டு இருந்தது. அதன் மீது விளம்பர போர்டு விழுந்து கட்டடம் இடிந்தது. விளம்பர போர்டு பல டன் எடையில் இரும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்தது. மழை காரணமாக பெட்ரோல் பம்ப் ஷெட்டில் ஏராளமானோர் ஒதுங்கி நின்றனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பெட்ரோல் பம்ப் அருகின் நின்ற ஏராளமான கார்கள், இரு சக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சிலர் மொபைல் போன் மூலம் உதவி கேட்டு கெஞ்சினர்.
ஆரம்பத்தில் காயம் அடைந்த சிலர் உயிரிழந்த நிலையில் அடுத்தடுத்து சிகிச்சை பலனளிக்காமல் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். அதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கவும் உத்தரவிட்டார். மேலும் நகரில் இருக்கும் விளம்பர போர்டு குறித்து தணிக்கை செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் புருஷோத்தம் கூறுகையில், ”விபத்து தொடர்பான விளம்பர போர்டை நிறுவிய விளம்பர ஏஜென்சி இயக்குனர் பாவேஷ் மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். அதோடு அப்பகுதியில் இருக்கும் 8 விளம்பர போர்டை 10 நாட்களுக்குள் அகற்றவேண்டும் என்றும், தவறினால் மும்பையில் விளம்பரம் செய்ய கொடுக்கப்பட்டு இருக்கும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று மும்பை மாநகராட்சி சம்பந்தப்பட்ட விளம்பர ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
காயம் அடைந்தவர்களுக்கு கை, கால், தோள் மற்றும் இடுப்பு பகுதி உடைந்து இருப்பதாக ராஜாவாடி மருத்துவமனை டாக்டர் பாரதி தெரிவித்தார். மேலும் பலர், சயான் லோக்மான்ய திலக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாதர் மற்றும் வடாலா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88