சென்னை: சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம். ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல் முதன்மை நீதிபதியாக பணியாற்றும் எம்.டி.சுமதி, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவி வகித்த ஏ.டி.மரியா கிளேட் சென்னை தொழிலக தீர்ப்பாய தலைவராகவும், அங்கு பணிபுரிந்த தீப்தி அறிவுநிதி சென்னை வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல கோவை அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான கூடுதல்மாவட்ட நீதிபதி என்.லோகேஸ் வரன், மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல் முதன்மை நீதிபதியாகவும், சென்னை சிபிஐ வழக்குகளுக்கான 8-வது கூடுதல் நீதிபதி கே.தனசேகரன், சென்னை குடும்ப நல நீதிமன்ற 2-வது கூடுதல் முதன்மை நீதிபதியாகவும், திருவாரூர் மாவட்ட நீதிபதி எம்.சாந்தி, சேலம் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்ற முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், திருச்சி வன்கொடுமை வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.செல்வ முத்துக்குமாரி திருவாரூர் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 41 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.