ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நடப்பு 2024-2025 ஆம் நிதியாண்டில் வருவதற்கு சாத்தியமில்லை என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறித்து உறுதியான காலக்கெடுவை தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு குழு பிரத்தியேகமாக எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரிக் இருச்சகர வாகனங்களை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஸ்டார்க் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மின்சார வாகன வணிகத்தை உருவாக்க தனியான பிரத்யேக வணிகக் குழுவை உருவாக்கி வருகிறது. சித்தார்த்த லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் வலுவான வணிகக் குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பது, இதற்கான பேட்டரி, நுட்பங்களை இலகுவான எடை மற்றும் குறைந்த விலையில் கொண்டு வரும் முயற்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஸ்கூட்டர்களை போல முக்கிய இடத்தை பெறுவதற்கு மோட்டார்சைக்கிள்கள் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும் என ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு இயக்குநர் சித்தார்த்த லால் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு EICMA 2023 கண்காட்சியில் முதல் முறையாக ஹிமாலயன் அடிப்படையில் EV மாதிரியை காட்சிப்படுத்தியது. இதன் அடிப்படையில் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கவும் ஆரம்ப நிலையில் உற்பத்தியை தற்பொழுதுள்ள ஆலையில் உற்பத்தி செய்யவும், எதிர்காலத்தில் செய்யாறு பகுதியில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை பிரத்தியேக தயாரிப்பு தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டுள்ளது.