இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் பிசிசிஐ இறங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தப் பணியை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்றும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். டிராவிட் 2021 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பை முடிந்த சமயத்திலிருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்தோடு அதாவது ஓடிஐ உலகக்கோப்பையோடு முடிந்தது. ஜூன் மாதமே டி20 உலகக்கோப்பை இருந்ததால் டிராவிட்டின் பதவிக்காலம் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பையுடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது. ஜூலை 1 ஆம் தேதி புதிய பயிற்சியாளர் பதவியேற்க வேண்டும்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பை பிசிசிஐ நேற்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மே 27 ஆம் தேதி மாலை 6 மணி வரைக்கும் இப்பணிக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருக்கிறது. இந்த பணிக்கான தகுதிகளாகவும் சிலவற்றை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
அதாவது, விண்ணப்பிக்கக்கூடியவர் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஓடிஐ க்களில் ஆடியவராக இருக்க வேண்டும். இல்லையேல், ஐ.சி.சியின் முழு உறுப்பினராக டெஸ்ட் அந்தஸ்துடன் இருக்கும் எதோ ஒரு தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
அதுவும் இல்லையெனில் அசோசியேட் நாடுகள் அல்லது ஐ.பி.எல் அல்லது போன்ற லீக் தொடர்கள் அல்லது கிரிக்கெட் ஆடும் நாடுகளின் A அணிகளின் குறைந்தபட்சமாக 3 ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும். அதுவும் இல்லையெனில் பிசிசிஐ யின் லெவல் 3 சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இவைதான் தகுதிகள்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்போம் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் புதிய பயிற்சியாளரின் பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகளாக இருக்கும். 2027 ஓடிஐ உலகக்கோப்பை முடியும் வரைக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற முடியும்.
இந்திய அணியின் பயிற்சியாளராக எந்த முன்னாள் வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்கிற உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.