‘‘திருச்சியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மாற்று இடத்தில் நிறுவவும்’’ – செல்வப்பெருந்தகை

சென்னை: திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சிலை அமைப்பதற்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சித் தீர்மானத்தின் அடிப்படையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில், முன்பிருந்த பிரபாத் தியேட்டர் எதிரிலுள்ள ரவுண்டானாவில், 23-02-2011 அன்று முழு உருவ வெங்கலச் சிலை நிறுவப்பட்டது. அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு குறுக்கிட்டதால் திறப்புவிழா நடைபெறவில்லை.

அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பலமுறை ரசிகர்கள் கோரிக்கை விடுத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், சிலை, அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில்,கடந்த 13 ஆண்டுகளாக இருந்தது.

இதற்கிடையில், சிலையை திறக்கவேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்திரவின்படி, தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்திரவில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சிலை நிறுவுவது சம்பந்தமான உச்ச நீதிமன்ற உத்திரவின் அடிப்படையிலும், திருச்சியில் நிறுவப்பட்டுள்ள நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலை சம்பந்தமான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்திரவின் அடிப்படையிலும், திருச்சியில், வேறொரு முக்கிய சந்திப்பில், நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தன் கலைத்திறனால் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகத் திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பராகத் திகழ்ந்தவருமான நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் இளவயதில் அவரது குடும்பம் வாழ்ந்தது திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் என்பதால், திருச்சியில் அவருடைய சிலை அமைவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், திருச்சியில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையையும் முக்கிய இடத்தில் நிறுவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.