இனிப்புகள் மீது ஒட்டப்படும் விலங்கு சில்வர் பேப்பருக்கு (Animal silver leaf) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) 2016-ல் தடை விதித்துள்ளது.
முன்பு இனிப்புகள் மீது அலங்காரத்திற்காக சில்வர் பேப்பர் ஒட்டப்பட்டிருக்கும். வராக் என்றழைக்கப்படும் உண்ணக்கூடிய இந்த சில்வர் பேப்பர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் அதோடு சேர்த்து இனிப்பையும் பலர் சாப்பிட்டுள்ளார்கள்.
இந்த சில்வர் பேப்பர் பசு மாடுகள் அல்லது எருமை மாடுகளின் குடலிலிருந்து தயாரிக்கப்படுவதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எப்படி அதை தயாரிக்கிறார்கள்?
இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளின் குடல் முதலில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட குடலை நீளமாகவும், சிறு துண்டுகளாகவும் வெட்டுகிறார்கள். இவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகிறார்கள்.
வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டுகளின் இடையிலும் மெல்லிய வெள்ளித் தகட்டை வைத்து தோள்பையில் இறுகக் கட்டிவிடுவார்கள். இந்த தோல் மூட்டையை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை தொடர்ந்து சுத்தியலால் அடிப்பார்கள். அதன் தடிமன் மெலிதாகும் வரை ஓரிரு நாட்கள் இதனைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
அதன்பிறகு மூட்டையை பிரித்து குடல்களை நீக்கி, சில்வர் பேப்பர்களை தனியாக எடுத்து இனிப்பு தயாரிக்கும் கடைகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள்.
ஏன் இந்த தடை?!
இந்த செயல்முறை தீங்கு விளைவிப்பதாகவும் சுகாதாரமற்றதாகவும் நுகர்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இனிப்புகளை செய்பவர்கள் சைவ இனிப்புகள் மீதும் இதனை ஓட்டுவதுண்டு. இது தெரியாமலேயே அதனை பலரும் உண்டு வந்திருக்கிறார்கள். மேலும், அத்தகைய சில்வர் பேப்பரில் பச்சைப் புள்ளியோ, மெரூன் நிறப் புள்ளியோ இருக்காது. எனவே, நுகர்வோர் சைவம் மற்றும் அசைவப் பொருட்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆகையால்தான் 2016 ம் ஆண்டு இதை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.
தற்போது பயன்படுத்தப்படும் சில்வர் பேப்பரில் நிக்கல், ஈயம், குரோமியம் … போன்றவை உள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.