அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளேன் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்…
தற்சமயம், பாடசாலை மாணவர்களின் பருவச் சீட்டு மற்றும் சிசு செரிய பஸ் சேவை என்பவற்றிற்காக தனது அமைச்சு மிகப் பெரிய செலவை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் 1500 சிசு செரிய பஸ்கள் இயங்கி வருகின்றன. திறைசேரியினால் 2024 ஆம் ஆண்டிற்கு அந்த பஸ்களுக்கான கட்டணமாக 2000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அண்மைக்கால பொருட்களின் விலையேற்றம் மற்றும் ஏனைய காரணிகளின் அடிப்படையில் தொலைதூர பகுதிகளுக்கு பஸ்களை வழங்குமாறு பெருமளவிலான பாடசாலைகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
இதன்படி, ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உள்ள பிரதேச அபிவிருத்திக் குழு உத்தியோகத்தர்கள் இது தொடர்பான யோசனைகளை அனுப்பி வைத்தால், அடுத்த பாடசாலை தவணை முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும்; தெரிவித்தார்.