தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கோடை மழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அவ்வப்போது வெப்ப அலையும் வீசுயதால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை. இந்நிலையில், ‘குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் கனமழை பெய்தது. காலை 6 மணி முதல் 8 மணி வரை தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. 2 மணி நேரமாக பெய்த மழையால் தூத்துக்குடி நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. தாழ்வான சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதனைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சாலைகள், தெருக்களில் தேங்கிய மழைநீரை வடிகால்கள் மூலம் வெளியேற்றவதற்கும், டேங்கர் லாரிகள் மூலம் உடனுக்குடன் வெளியற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினர்.

இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. காலை 10 மணி வரை ஆங்காங்கே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அதன்பிறகு லேசான வெயில் அடித்தது. அவ்வப்போது மேகங்கள் திரண்டு வந்து மேகமூட்டமாக காணப்பட்டன. ஆனால் பகலில் மழை பெய்யவில்லை.

59 மி.மீ. மழை: மாவட்டத்தில் இன்று காலை 8 வரையிலான 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் அதிகபட்சமாக 59.30 மி.மீ., மழை பதிவானது. மேலும், ஸ்ரீவைகுண்டம் 3, சாத்தான்குளம் 5, கழுகுமலை 7, சூரங்குடி 21, ஓட்டப்பிடாரம் 5, மணியாச்சி 4, வேடநத்தம் 10, கீழஅரசடி 20 மி.மீ., மழை பதிவானது. இந்த மழை காரணமாக தூத்துக்குடியில் அக்னிநட்சத்திரம் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.