Allu Arjun: "எந்த அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பில்லை!" – அல்லு அர்ஜுன் விளக்கம்

ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களைவைத் தேர்தல் நேற்று மே 13ம் தேதி நடந்து முடிந்தது.

இத்தேர்தலில் பவண் கல்யாணுக்கு ஆதரவாக அவரின் அண்ணன் மகன் நடிகர் ராம் சரண் தேர்தல் பிரசாரம் செய்தார். மறுபுறம் தனது நண்பனும், நாந்தியால் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஷில்பா ரவி ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் ‘புஷ்பா’ நடிகர் அல்லு அர்ஜுன். நேரடியாக அரசியலில் பெரிதாகப் பங்கெடுக்காத இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் இத்தேர்தலில் ஆதரவு தெரிவித்தது ஆந்திரத் தேர்தலில் பெரும் பேசுபொருளாக மாறியது.

அல்லு அர்ஜுன், ஷில்பா ரவி

கடந்த சனிக்கிழமை மே 11-ம் தேதி நாந்தியால் தொகுதியில் இருக்கும் ஷில்பா ரவி ரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்திருந்த அல்லு அர்ஜுன், பால்கனியில் நின்றவாறு ஷில்பா ரவி ரெட்டியின் கையைத் தூக்கிக் காண்பித்து, “ஷில்பா ரவி ரெட்டி எனது நெருங்கிய நண்பர். அவருக்கு உதவி தேவைப்பட்டால் எப்போதும் அவருக்காக வந்து நிற்பேன். அப்படித்தான் இன்றும் அவருக்காக வந்திருக்கிறேன்.

அரசியல் கட்சியை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நான் இங்கு வரவில்லை. என் நண்பருக்காக வந்திருக்கிறேன்” என்றார். குவிந்திருந்த ரசிகர்களும் ஆர்ப்பரித்துக் கோஷமிட்டனர். இது ஆந்திரத் தேர்தல் களத்தில் நேற்று பெரும் பேசுபொருளாக இருந்தது. 

அல்லு அர்ஜுன்

இதையடுத்து அன்றே, ஒரே நேரத்தில் எந்த அனுமதியும் இன்றி ஏராளமானவர்களைக் கூட்டம் சேர்த்ததாகக் கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷில்பா ரவி ரெட்டி ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால், அல்லு அர்ஜுன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்றும் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துப் பேசியிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன், “எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என்பதை நான் முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. நடுநிலையாக மக்கள் பக்கம் நிற்பவன் நான்.

என் நண்பன் ஷில்பா ரவி ரெட்டி கடந்த தேர்தலிலேயே என்னை அழைத்திருந்தார். அப்போது என்னால் அவருக்கு ஆதரவளிக்க முடியவில்லை. ஆனால், நிச்சயம் வருவேன் என்று அவருக்கு வாக்கு கொடுத்திருந்தேன். அதன்படி இந்தத் தேர்தலில் அவரைச் சந்தித்து அவருக்கு ஆதரவளித்தேன். எங்களின் நட்புக்காக மட்டுமே நான் இதைச் செய்தேன். வேறெந்த அரசியல் உள்நோக்கங்களும் இதில் இல்லை.

எனது மாமா பவன் கல்யாண், நான் எப்போதும் துணை நிற்கும் எனது நண்பர் ரவி மற்றும் எனது மாமனார் திரு.ரெட்டி ஆகியோருக்கும் இது பொருந்தும். நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேனே தவிர எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.