'சி.ஏ.ஏ. குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார்' – அமித்ஷா குற்றச்சாட்டு

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பாங்கான் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சாந்தனு தாக்கூரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-

“குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்பி வருகிறார். ஆனால் சி.ஏ.ஏ.வால் யாருக்கும் எந்த அசவுகரியமோ, சிரமமோ ஏற்படாது என்று நான் உறுதியளிக்கிறேன். பா.ஜ.க.வை ஆதரிப்பதால் அகதிகள் இந்த நாட்டில் குடியுரிமை மற்றும் மரியாதை இரண்டையும் பெறுவார்கள்.

சி.ஏ.ஏ.வின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று மம்தா பானர்ஜி பொய் சொல்கிறார். அகதிகளான எனது சகோதரர்கள் இந்தியாவின் குடிமக்களாக மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இது பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி. குடியுரிமை என்பது மத்திய அரசின் பிரத்யேக அதிகாரத்தின் கீழ் வருகிறது என்பதை மம்தா பானர்ஜி நினைவில் கொள்ள வேண்டும்.

மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது. மேற்கு வங்காளத்தில் நிலவி வரும் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சீரழிவில் இருந்து காப்பாற்ற நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். சிட்பண்ட் ஊழல், ஆசிரியர் பணி நியமன ஊழல், நகராட்சி பணி நியமன ஊழல், ரேஷன் ஊழல், மாடு, நிலக்கரி கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும். யாரையும் தப்ப விடமாட்டோம்.”

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.