நாளுக்குநாள் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் தாக்குதல் அதிகரித்துக்கொண்டுவரும் நிலையில், தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி இந்த சம்பவம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இன்று நடந்திருக்கிறது.
குறிப்பாக, குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய் திரும்ப வந்து வீட்டில் பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்திருக்கிறது.
குழந்தையின் பெற்றோர் கல் பாலிஷ் செய்யும் யூனிட்டில் வேலைசெய்துவரும் நிலையில், குழந்தையைக் கடித்த கொன்ற நாய் அந்த யூனிட்டில் வளர்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த யூனிட்டின் உரிமையாளர் அதை மறுத்து நாய் வழிதவறி சென்றிவிட்டதாகத் கூறினார். இன்னொருபக்கம், இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தை ஆத்திரத்தில் அந்த நாயை அடித்துக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரலில்கூட ஹைதராபாத்தில் இரண்டரை வயது சிறுமியும், உத்தரப்பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியும் நாய் தாக்கியதில் உயிரிழந்தனர். சமீபத்தில் சென்னையில் பூங்கா ஒன்றில், ஒருவரின் வளர்ப்பு நாய் ஐந்து வயது சிறுமியைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெறுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.
கடந்த டிசம்பரில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2022 முதல் 2023 வரையில் நாய்க்கடி சம்பவங்கள் ஆண்டுக்கு 26.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.