"UPSC க்ளியர் பண்ண இதுல எல்லாம் கவனம் செலுத்துங்க!" – விகடன் சிறப்பு நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து UPSC/ TNPSC Group – I, II தேர்வுகளில் வெல்வது எப்படி என்கிற நிகழ்வை கடந்த மே 11-ம் தேதி நடத்தியிருந்தது. போட்டித்தேர்வின் மீது ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் நூற்றுக்கணக்கில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்று சென்றனர்.

மாணவர்களுக்கென பிரத்யேகமான போட்டித்தேர்வு கேள்வி – பதில்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் இணைந்து படிக்க ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு உரைகளையும் வழங்கினர்.

UPSC – TNPSC Event

‘உங்களை உங்களோடு மட்டுமே ஒப்பிடுங்கள்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு பேசிய வருமானவரித்துறை ஆய்வாளர் V. நந்தகுமார், “போட்டித்தேர்வில் வெல்ல வேண்டும். அரசு அதிகாரியாக அமர வேண்டும் என்பதை உங்களின் ஆழ்மன வேட்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் அதற்கேற்றவாறு ஒருங்கிணைத்துக் கொள்ளுங்கள். குடிமைப்பணித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரி, தவறு என்கிற பதில்களைக் கடந்து, ஒரு விஷயத்தில் உங்களின் கருத்தும் அபிப்ராயமும் என்னவாக இருக்கிறது என்பதையும் வெளிக்காட்ட வேண்டும். அதற்கு உங்களின் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை பேர் இந்தத் தேர்வுகளை எழுதுகிறார்கள் அவ்வளவு பேருடனும் நாம் போட்டி போட வேண்டுமா என்றால் உங்களுக்கு மலைப்பாகத்தான் இருக்கும்.

உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். போட்டி உங்களுக்கும் இன்னொருவருக்கும் இல்லை. போட்டி உங்களுக்கும் உங்கள் கையில்ருக்கும் கேள்வித்தாளுக்கும் மட்டும்தான். சீக்கிரம் வென்று வாருங்கள். சக பணியாளராக உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்ற நந்தகுமார் IRS உரையை கேட்ட மாணவ மாணவிகளின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.

“இது பணத்துக்காக செய்கிற பணி அல்ல. ஒரு மனநிறைவிற்காக செய்கிற பணி” எனப் பேச்சைத் தொடங்கினார் R.பாலகிருஷ்ணன் IAS. மேலும் பேசியவர், “பெருந்தலைவர் காமராஜரின் வழி அரசியல் பணியாற்றிக் கொண்டிருந்தவன் நான். அவர்தான் என்னை அழைத்து ‘நீ போய் கலெக்டர் ஆகு…’ என அனுப்பி வைத்தார். அவரின் பேச்சைக் கேட்டுத்தான் குடிமைப்பணிக்குள் வந்தேன்.

UPSC – TNPSC Event

நான் ஒரு தமிழ்ப் பட்டதாரி. தமிழில் தேர்வு எழுதிதான் குடிமைப்பணித் தேர்விலும் வென்றேன். தமிழ் படித்தவன் என்பதில் எனக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மையே இருந்ததில்லை. நீ உனக்கு பலமான விஷயத்தில் கெட்டிக்காரன் என்றால் நான் தமிழில் கெட்டிக்காரன். அவ்வளவுதான் என்னுடைய பார்வை. நாம் நம்மை யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

குடிமைப்பணித் தேர்வுகளை இந்த முறையில் வெல்லலாம் அந்த முறையில் வெல்லலாம் என என்னென்னவோ சொல்வார்கள். ஆனால், அப்படி எதுவுமே கிடையாது. இங்கே பாஸ் ஆவதற்கென்று ஒரு தீர்க்கமான வழியே கிடையாது. அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். வாய்ப்பே இல்லாத ஒரு சூழலிலிருந்து புறப்பட்டு வந்து குரல் இல்லாத மனிதர்களுக்காக உழைக்க வேண்டும். அதுதான் குடிமைப்பணியின் சிறப்பம்சம். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யுங்கள்.

பள்ளியில் பேச்சுப்போட்டி என்றாலே இரண்டாவது மூன்றாவது பரிசை மட்டும்தான் அறிவிப்பார்கள். ஏனெனில், முதல் பரிசு எப்போதும் எனக்குதான். கல்லூரியில் வேறு எதோ அறிவியல் பாடத்தை எடுத்திருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக நானும் கரைந்திருப்பேன். ஆனால், நான் இளங்கலையிலும் முதுகலையிலும் தமிழ் எடுத்து படித்தேன். குடிமைப்பணித் தேர்வையும் தமிழில்தான் எதிர்கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னாள் இப்படி நிற்கிறேன். இப்போது போட்டி அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புமே அதிகமாக இருக்கிறதே. இணையத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் உங்களால் படிக்க முடியும். அப்போதெல்லாம் ஒரு கையேடு வாங்குவதற்காக நாங்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு அலைவோம்.

ஆக, இப்போதிருக்கும் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் தமிழ் படித்தவன், தமிழ்தான் தெரியும் என்பதில் நான் என்றைக்குமே தாழ்வாக உணர்ந்ததே இல்லை. உங்களைப் பற்றி நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு யாருமே போட்டி கிடையாது. நீங்கள்தான் உங்களுக்கு போட்டி. நான் முசோரியில் குடிமைப்பணிக்கான பயிற்சியில் இருந்தபோது பயிற்சி வகுப்புகளை முடித்துக் கொண்டு ஒரு வேனில் நாங்கள் எல்லாரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு இரயில்வே கேட் முன் வண்டி நின்றது. சில நிமிடங்கள் தாமதமானது.

UPSC – TNPSC Event

அப்போது வண்டிக்குள் என்னுடைய சகாவிடமிருந்து ஒரு ஓங்கிய குரல், ‘உள்ள இவ்வளவு அதிகாரிங்க இருக்கோம். நம்ம வண்டியவே நிப்பாட்டுறாங்களா… வண்டிய இழுத்து ஓட்டுங்க…’ என்று கத்தினார். எனக்கு அந்த மமதையைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. குடிமைப்பணியின் அடிப்படையையே உணராத குரல் அது. நாம் மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம். அப்படி நினைத்ததால்தான் அதிகாரிகளின் கால்தடமே படாத மலைக்கிராமங்களுக்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தேன். உத்தரப்பிரதேச தலித்துகள் வாக்களிக்க அனுமதிக்கப்படாத அளவுக்குக் கொடுமை நடக்கும் இடங்களில் கூட சுமூகமாக தேர்தல்களை நடத்தி முடித்திருக்கிறேன். இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலத்தை உலகளவில் பேரிடரைச் சமாளிக்கும் விதத்தில் முன்னோடியாக மாற்றியிருக்கிறேன்.

பல தனியார் நிறுவனங்களிலிருந்து தலைமை செயல் அதிகாரி பணிக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். பெரும் பணம் தருவதாக சொல்வார்கள். அதையெல்லாம் நான் ஒப்புக்கொண்டதே இல்லை. ஏனெனில், மக்களுக்காக பணி செய்வதுதான் திருப்தி. அதனால்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகுமே கூட 40 ஆண்டுகளாக மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன். வெறுமென பணத்தால் இந்த திருப்தியை கொடுத்துவிட முடியாது. அதற்காகத்தான் குடிமைப்பணிகளை நோக்கி நகருங்கள் என்கிறேன்” என பாலகிருஷ்ணன் IAS பேசி முடிக்க அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

UPSC – TNPSC Event

“வெறும் பொருளாதார நோக்கத்திற்காக மட்டும் மாணவர்கள் போட்டித்தேர்வுகளை அணுகாதீர்கள். அதைத்தாண்டி இங்கே கிடைக்கும் திருப்தி பெரியது. அதற்காக வாருங்கள் கட்டாயம் வெல்வீர்கள்” என்றார் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என வெகு தொலைவிலிருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளெல்லாம் களைப்பை மறந்து பெரும் ஊக்கம் பெற்று தன்னம்பிக்கையுடன் விடைபெற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.