கனடா வரலாற்றில் முதன்முறையாக… பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது

ஒட்டாவா,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரில் இருந்து கனடா நாட்டுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று சென்றடைந்தது.

அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 400 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில், ரூ.167 கோடி ஆகும். டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியதும், அதில் இருந்த இந்த கன்டெய்னர், விமான நிலையத்தின் தனியானதொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் அந்த கன்டெய்னர் காணாமல் போனது. போலி ஆவணங்களை கொண்டு அது கடத்தப்பட்டு இருந்தது. தங்க கட்டிகளும் கொள்ளையடிக்கப்பட்டன. கனடா வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பற்றி அடுத்த நாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின்போது, கொள்ளை சம்பவத்தில், ஏர் கனடா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கும் என அப்போது சந்தேகிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியினர் என தெரிய வந்தது. இந்த நிலையில், முக்கிய புள்ளியான ஆர்சிட் குரோவர் (வயது 36) என்ற நபரை போலீசார் தேடி வந்தனர். ஓராண்டாக சிக்காமல் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குரோவரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தகவல் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மற்ற 9 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர்த்து, ரூ.3.06 லட்சம் மதிப்பிலான பணம் திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில், குரோவருக்கு எதிராக கனடா முழுவதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று, ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அமெரிக்காவிலும் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து கனடா சென்றடைந்த அவரை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.