சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
கடந்த ஏப்.15 அன்று சென்னைபுரசைவாக்கம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரான பழனிசாமி, ‘மத்தியசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனதுஎம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை செலவு செய்யவில்லை என குற்றம் சாட்டி விமர்சித்து பேசியிருந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக தயாநிதி மாறன் சென்னைபெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் பழனிசாமி எனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதில் துளியும் உண்மை இல்லை. மத்திய சென்னை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான்மீதம் உள்ளது. எனவே அவர்மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக பழனிசாமி நேற்று எழும்பூர்பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் 13-வது மாஜிஸ்திரேட் எம்.தர்மபிரபு முன்பாக ஆஜரானார். அப்போது பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரினர். அதையடுத்து சிறப்புநீதிமன்றத்துக்கு மாற்றி, உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், விசாரணையை வரும் ஜூன் 27-க்கு தள்ளிவைத்துள்ளார்.
வினோஜ் பி.செல்வம்: இதேபோல மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் ஜூன் 6 அன்று வினோஜ் பி.செல்வம் கண்டிப்பாக ஆஜராக எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.