தேசிய அரசியலின் சூழலுக்கும், பங்குச்சந்தை நிலவரத்துக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போது ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில், 400 இடங்களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில், 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க தாண்டாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவருகிறார்கள்.
இத்தகைய நிச்சயமற்ற சூழலில், இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையில் ஒரே நாளில் ஏற்பட்ட சரிவில் ரூ7.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏழு கட்டத் தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில், பங்குச்சந்தையின் நிலைமை சீரற்ற தன்மையோடுதான் இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் காரணமாக, இந்தியாவில் தற்போது நிலவும் தெளிவற்ற அரசியல் சூழலில், இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து பெருமளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும், பங்குச்சந்தை சரிவுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர், பணவீக்கம் குறித்த அச்சம் போன்ற உலகளாவிய பிரச்னைகளும் இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்றும் பங்குச்சந்தை நிலவரங்கள் உற்று கவனித்துவரும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே மூத்த பத்திரிகையாளர் என்.ராம், “இந்திய தேர்தலில் திருப்புமுனை ஏற்பட போகிறதோ? பங்குச் சந்தைகள், சில குறியீடுகள், மற்ற சில விஷயங்கள், நிச்சயமாக அது மாற்றத்துக்கானது எனத் தெரிவிக்கின்றன.” என தெரிவித்துள்ளார்,
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ‘2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப்போகிறது’ என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. தேசிய அளவில் அதிகமான இடங்களில் பா.ஜ.க ஜெயிக்கும் என்று பா.ஜ.க தலைவர்கள் சொல்லிவந்தனர்.
பிரதமர் மோடி, ‘பா.ஜ.க 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெல்லும்’ என்று பேசத் தொடங்கினார். ஆனால், முதல் கட்டத் தேர்தல் முடிந்தவுடனேயே, பா.ஜ.க-வின் வெற்றி குறித்து முன்னர் வெளியான கணிப்புகள் எல்லாம் மிகையானவை என்று எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்தன.
இந்தப் போக்குகள் குறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது, “பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பா.ஜ.க ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை தங்கள் பிரசாரத்தில் முன்வைத்திருந்தால், தேர்தல் களமும், அரசியல் களமும் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால், மதரீதியான பிரசாரத்தையே அவர்கள் முதன்மைப்படுத்தினார்கள். இன்னொரு புறம், ‘இந்தியா’ கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற பேச்சுகளும் விவாதத்தில் பேசப்பட்டது. அதனால், மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வராதோ, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சியமைக்குமோ என்ற விவாதங்கள் தேசிய அரசியலில் எழுந்தன. அதன் தாக்கத்தைத்தான் பங்குச்சந்தையில் இப்போது காண முடிகிறது” என்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், “பல லட்சம் கோடி வரிச்சலுகைகள், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி என்று பெரும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மத்திய பா.ஜ.க அரசு செயல்படுகிறது. அதே நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது” என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள்.
ராகுல் காந்தியைக் குறிவைத்து அதானி, அம்பானியைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி செய்த பிரசாரமும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ’தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதானி, அம்பானி ஆகியோர் பற்றி பேசுவதை ராகுல் காந்தி ஏன் நிறுத்திவிட்டார்’ அவர்களிடம் ராகுல் காந்தி பணம் வாங்கினாரா? அம்பானி, அதானியிடமிருந்து ராகுல் காந்திக்கு கறுப்புப்பணம் போனதா?’ என்றெல்லாம் பிரதமர் மோடி எழுப்பிய கேள்விகளுக்கு, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.
“அதானி, அம்பானி தொடர்பான பேச்சுகளும், அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களும் பங்குச்சந்தையின் சரிவுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று” என்று பங்குச்சந்தை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனிடையே, ‘பங்குகளை இப்போதே வாங்குங்கள்; ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பங்குச்சந்தை உயரப்போகிறது’ என்று கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. எது நடக்கும் என்பது ஜூன் 4-ம் தேதி தான் தெரிய வரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88