“தமிழ்நாட்டுக்காரர்கள் எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு சென்று வேலை பார்த்து, சம்பாதித்து வந்தாலும், சொந்த ஊரில் நிலம், வீடு வாங்க வேண்டுமென்பதை லட்சியமாக வைத்திருப்பாங்க… அப்படி, துபாயில் உள்ள ஏராளமான தமிழக மக்களின் கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் இந்த கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்” என்கிறார் இளங்கோவன் மகிழ்ச்சியுடன்.
கிரடாய் (CREDAI – Confederation of Real Estate Developers Association of India) அமைப்பின் தமிழ்நாட்டுத் தலைவராக தற்போது பொறுப்பு வகிக்கும் இளங்கோவன், மதுரையில் பிரபலமான விஷால் புரமோட்டர்ஸ், ‘விஷால் டி மாலி’ன் நிறுவனராவார்.
தமிழ்நாட்டில் சென்னையைக் கடந்து கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஒருங்கிணைத்து முதல் முறையாக ‘கிரடாய் தமிழ்நாடு ஃபேர்புரோ-2024’ என்ற பெயரில் வீடு, வீட்டுமனைக் கண்காட்சியை துபாயில் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
அமீரகம் என்று சொல்லப்படுகிற யு.ஏ.இ-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, தென் மாவட்ட, டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்காகவே இந்த கண்காட்சி கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல பில்டர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கலந்துகொண்ட இந்தக் கண்காட்சியை அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருகை தந்து, தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிள்ளனர்.
இது குறித்து கிரடாய் தமிழ்நாடு தலைவர் இளங்கோவனுடன் பேசினோம். இந்தக் கண்காட்சியில் அவர் பெற்ற அனுபவம் பற்றி நம்மிடம் எடுத்துரைத்தார்.
“தமிழ்நாட்டில் முக்கியமான நகரங்களில் கிரடாய் மூலம் பிராப்பர்ட்டி எக்ஸ்போ நடத்தியிருந்தாலும் முதல் முறையாக சென்னையிலுள்ள பில்டர்ஸ்களுடன் பிற மாவட்டங்களிலுள்ள பில்டர்ஸ்களையும் ஒருங்கிணைத்து துபாயில் கண்காட்சி நடத்தினோம்.
அமீரகத்தில் பெரிய நிறுவனங்கள் மட்டும் கலந்துகொள்ளும் இந்திய அளவிலான பிராப்பர்ட்டி எக்ஸ்போக்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. அந்தக் கண்காட்சிகள் ஈவெண்ட் நடத்தும் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து நடத்துவதால், லாப அடிப்படையில் மட்டுமே நடக்கும். மக்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ பலன் இருக்காது. மக்களுடன் ஒரு இணைப்பும் ஏற்படாது. அதில் சென்னையிலுள்ள பெரிய நிறுவனங்களும் கலந்து கொள்ளும். அந்த கண்காட்சியில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பில்டர்ஸ் கலந்துகொள்ள முடியாது.
ஆனால், நாங்கள் நடத்திய கண்காட்சியில் சென்னையுடன் கோவை, சேலம், ஓசூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலியிலுள்ள ரியல் எஸ்டேட் பில்டர்கள், புரமோட்டர்கள் கலந்துகொண்டனர். அவர்களைக் கலந்துகொள்ள வைக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே.
துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கக்ச் சேர்ந்தவர்களும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கடுமையாக உழைக்கும் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த எக்ஸ்போ அமைந்தது.
உயர் பதவியிலோ, கடைநிலை ஊழியராகவோ வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நம்மவர்கள், சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சொந்த ஊரிலோ மாவட்டத்திலோ மனையோ, வீடோ வாங்க விரும்புகிறார்கள்.
ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வரும் அமீரகத் தமிழர்கள் வீடு, மனை வாங்க ஆசைப்பட்டாலும், அந்தக் குறுகிய விடுமுறைக் காலத்தில் நல்ல மனைகளை, பில்டர்களை விசாரித்து தேடுவதில் விடுமுறை நாட்கள் போய்விடுகிறது. தவறான நபர்களிடம் பணம் தந்து ஏமாந்தும் போகிறார்கள்.
அவர்களின் கஷ்டத்தைப் போக்கவும், அவர்களின் இல்லக்கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கிரடாய் அமைப்பில் உள்ள தரமான நிறுவனங்கள் அவர்களைத் தேடி சென்றோம்.
அது மட்டுமின்றி, இடம் வாங்குவது, பதிவது, விற்பது குறித்த பல சந்தேகங்களயும் தீர்த்து வைத்தோம். எப்படி, தங்கத்தின் தரத்தை ஹால்மார்க் உறுதி செய்கிறதோ. அதை போல நல்ல பில்டர்கள், கட்டுமான நிறுவனங்ளை கிரடாய் அடையாளப்படுத்துகிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மாவட்டத்தில், சொந்த ஊரில் மனை, வீடு வாங்க வேண்டும் என்கிற கனவை நிறைவேற்ற அதற்கு அந்தத்த மாவட்டங்களில் செயல்படும் நம்பகமான பில்டர்களை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அங்கு வசிக்கும் மக்களுடன் கனெக்ட் செய்வதே எங்களின் ஒரே நோக்கமாக இருந்தது. துபாய் கண்காட்சியில் அது நிறைவேறியுள்ளது” என்றார்.
இந்த கண்காட்சிக்கு அமீரக தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஏமாந்து விடாமல் சரியான நம்பிக்கையான நிறுவனங்கள் மூலம் 1 லட்ச ரூபாயில் தொடங்கி, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒவ்வொருவரின் பொருளாதார நிலைக்கேற்ப மனை, வில்லா, அபார்ட்மெண்ட் பிளாட், கமர்ஷியல் பிளாட் என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
“சொந்த வீடு இன் யுவர் சொந்த ஊரு” என்ற டச்சிங்கான தீமுடன் நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை ஆண்டுக்கு இரண்டு முறைகூட துபாயில் நடத்தலாம் என்று கிடராய் தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது.
இரண்டு நாள் நடந்த இக்கண்காட்சியை யு.ஏ.இ-யில் பல பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் வந்து பார்த்து பயனடைந்துள்ளனர்.