கவின் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகனாக வேண்டும் என்ற கனவுடன் போராடுகிற சாமான்ய இளைஞனின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவின். இத்திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் காதல் சுகுமார் நடித்திருக்கிறார். சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் அழுத்தமான கதாபாத்திரமாக அது அமைந்திருக்கிறது. இந்நிலையில் காதல் சுகுமாரை சந்தித்துப் பேசினோம்.
” ஸ்டார் படத்துக்கு கிடைச்ச வரவேற்ப்பு எனக்கு ஒரு எனர்ஜி பூஸ்ட் மாதிரிதான். மறுபடியும் ஒரு கம்பேக் மாதிரி இருக்கு. சினிமாவுல தொடர்ந்து சின்ன சின்ன வேலைகள் பண்ணிகிட்டு இருந்தேன். இந்தப் படத்துக்காக இளன் முதன்முதல்ல வந்து பேசும்போதே ‘சின்ன கதாபாத்திரம்தான். ஆனா, படத்திற்கு வலுசேர்க்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னாரு. நான் என்னைக்கும் சினிமாவுல பணத்தை பத்தி யோசிக்கவே மாட்டேன். தொடர்ந்து சினிமாவுல இயங்கணும்னுதான் ஒரு ஆர்வத்துலதான் சுத்திட்டு இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்னுதான் கேட்பேன். இந்தப் படத்துக்கும் அதே மாதிரிதான். ஆனா, இப்படியான வரவேற்பு கிடைக்கிறது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கு. எல்லோருமே இளனும் கவினும் சேர்ந்து உனக்காக ஒரு படம் எடுத்திருக்காங்கனுதான் சொன்னாங்க. சினிமா பற்றிய கதைங்கிறதுனால எனக்கு ரொம்பவே கனெக்டாச்சு. இப்போ ஒரு 10 வருஷமாக சினிமாவுல நான் லைம் லைட்லையே இல்ல. நடிப்பை விட்டுட்டு டைரக்ஷன் பக்கமும் பயணிச்சேன். ஆனா, டைரக்ஷன்ல நடிப்பு அளவுக்கு பெருசா என்னால வர முடியல. சின்ன பட்ஜெட் படம்னு வரும்போது சின்ன நடிகர்களைதான் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க முடியும்.
சிலர் இவன் காமெடியன்தானே இவன் என்ன ஸ்கிரிப்ட் பண்ணுவான்னு நினைப்பாங்க. ஆனா, என் கூடவே இருக்கிறவங்களுக்குதான் என்னை பத்தி தெரியும். இந்த படத்துல கேரவன்ல ஒரு சீன் இருக்கும். அதுல ‘சினிமாவுல ஜெயிக்க கொஞ்ச நாள் ஆகும்னு சொல்லுவேன். அதுக்கு பிறகு ஐஸ்கிரீம் விக்குற சீன்ல என்னாச்சுனே தெரியல சடசடனு மேல போனேன். அதே வேகத்துல மொத்தமாக எல்லாம் போச்சு. கருப்பாக இருக்கிறவன்லாம் வடிவேலு ஆகிட முடியாது’னு வசனங்கள் இருக்கும். முன்னாடி கேரவன் சீன்ல நான் ஒரு நடிகனாக நடிச்சேன்.
ஆனா, ஐஸ்கீரிம் விக்குற சீன்ல ரொம்பவே எமோஷனலாக கனெக்ட்டாகிதான் பேசுனேன். எல்லோருக்கும் இப்படியான ஒரு காலம் வரும். கவுண்டமணி சாருமே மூணு தடவை என்ட்ரி ஆனாரு. நம்ம பயணிக்கும்போது திடீர்னு ஒரு தேக்கம் வந்திடும். நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி பரதநாட்டியம், வெஸ்டர்ன், ஃபோல்க்னு எல்லா நடன வகைகளையும் கத்துக்கிட்டேன். நான் டிவில வர்றப்போ வடிவேலு மாதிரி பண்ணினேன். ஆனா, அது ஆபத்துனு அப்போவே தெரியும். இப்போ சில விஷயங்கள் நாம தொடர்ந்து பண்ணும்போது அடுத்தடுத்தும் அதே மாதிரியே பண்ண ஆரம்பிச்சிடுவோம். எப்போவும் அசல் ஒண்ணுதான். ஆனா, அசலை விட போலிதான் நல்லா இருக்கும்னு சொல்வாங்க.
கமல் சார்தான் என்னை மாத்தினாரு. ‘நீங்க எப்போதும் மத்தவங்க மாதிரி பண்ணாதீங்க. உங்களுடைய தனித்துவம் போயிடும்’னு கமல் சார் சொன்னாரு. ” என்றவர் காதல் திரைப்படத்தின் நாட்களை ரீவைண்ட் செய்து பேசத் தொடங்கினார். அவர், ” இந்த படத்துல வர்ற மாதிரிதான். அந்த சமயத்துல நான்லாம் ரொம்ப பிஸியாக இருந்தேன். கொஞ்ச நாட்கள்ல , அவர் நடிச்சா நான் நடிக்கமாட்டேன்னு சொல்வாங்க. பிசினஸ் எதிர்பார்கிறவங்க அந்த நடிகரை ரொம்பவே முக்கியமாக நினைப்பாங்க.அப்போ ஸ்பாட்ல இருந்து திரும்ப அனுப்புவாங்க. அது ரொம்ப அவனமானமாக இருக்கும்.
அது எனக்கு தனிப்பட்ட முறையில நடக்குற அவமானம் இல்ல. என்னுடைய கலையை அந்த இடத்துல மதிக்காம விட்டுருவாங்க. அதுக்குப் பிறகு நானே அவர் நடிச்சா நான் நடிக்கமாட்டேன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். அப்படியே பெரிய படங்களோட வாய்ப்பு தவறிடுச்சு. பெரிய நடிகர்களோட தொடர்ந்து பயணிக்க முடியாம போச்சு. இதுமட்டுமில்ல சச்சின், ஆறு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்கள்ல நான் முதல்ல நடிக்க வேண்டியது. ஆனா, இந்த வாய்ப்பு என்கிட்ட இருந்து போனதுக்கு நான் வருத்தப்படல. ” என்றார்.
மேலும் பேசிய அவர், ” கவின்கூட குறைவாகதான் பேசினேன். நல்ல கதைகளை செலெக்ட் பண்ணுங்கனு சொன்னேன். உங்களுடைய கதாபாத்திரங்கள் பொது மக்களோட வாழ்க்கையை பிரதிபலிக்கிற மாதிரி இருக்கணும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்களோட கதையை தொடுங்கனு சொன்னேன்.அந்த கோட்டுலதான் அவர் பயணிக்கிறார்.” என்றவர், ” அடுத்ததாக சந்தானத்தை வச்சு ஒரு படத்தை இயக்குறேன். பெரிய நிறுவனம் அதை தயாரிக்குறாங்க. அதுக்கு முன்னாடி நான் இன்னொரு திரைப்படம் டைரக்ட் பண்றேன். இதுமட்டுமில்ல, இப்போ நான் 6 படங்கள்ல நடிச்சிருக்கேன். இப்போ ஸ்டார் படம் ரிலீஸான பிறகு சில படங்கள்ல நடிக்கிறதுக்கு கேட்டிருக்காங்க. இதுதான் சினிமா பண்ற மேஜிக்.” எனப் பேசினார்.
சுகுமார் சமீபத்தில் நடிகர் விஷாலின் கருத்து குறித்து கோபமாக பேசியிருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், ” சின்ன பட்ஜெட் படங்கள் பத்தி விஷால் சார் பேசியிருந்தார். சின்ன பட்ஜெட் படங்கள்தான் எங்களை காப்பாத்தியிருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சு அந்த படம் வந்தால் அது வரைக்கும் அந்த இயக்குநரை யார் காப்பாத்துறது. ஒரு தொழிலை பண்ண வர்றவங்களை பண்ண வேண்டாம்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. இதுக்கு முன்னாடி நீங்க சினிமாவுக்கு என்ன பண்ணீட்டீங்க !
ஒரு வெற்றி வந்துருச்சுனு ரொம்ப பேசாதீங்க. இதுனால பர்சனலாக பாதிக்கப்பட்ட சிலர் என்கிட்ட பேசுனாங்க. எனக்கு படம் பண்றதாக சொன்ன தயாரிப்பாளர்கள் ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க.” என ஆதங்கத்தோடு பேசினார்.