இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற GDP-யில் 6% கல்விக்கு செலவிட வேண்டும் – விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்

”ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டு கல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கல்வித் துறையை இன்னும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யின்(VIT) வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து பிடிஐ(Press Trust of India)-க்கு அவர் அளித்த பேட்டியில், ”2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டுமெனில், கல்வித்துறைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை செலவிட வேண்டும்.

Education

2023ல் இந்தியாவின் தலாவருமானம் $2,600. ஆனால், தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்கள் போன்று கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தலாவருமானம் தேசிய சராசரி தலா வருமானத்தை விட அதிகமாக உள்ளன. தென் மாநிலங்களில், தலாவருமானம் $3,500 முதல் $4,000 வரை மாறுபடும். கேரளா முதலிடத்திலும், தெலுங்கானா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதேசமயம் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற கல்வியில் பின்தங்கியிருக்கும் மாநிலத்தின் தலாவருமானம் $1,000க்கும் குறைவாகவே உள்ளது.

இதை அரசியல் கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே, கல்வியில் கவனம் செலுத்தாவிட்டால் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. ஆக, இதைப்பற்றி மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றாக அமர்ந்து கல்விக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதை சிறப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார். சர்வதேச உயர் கல்விக்கு விஐடி-யின் நிறுவனர் ஜி.விஸ்வநாதன் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காக மே-10 அன்று ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் (SUNY) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்

”இந்தியாவில் உயர் கல்வியை விரிவுபடுத்துவதிலும், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களுடன் கூடி மாணவர்கள் திறன் மேம்பாடு செய்வதிலும் விஐடி-யின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் முன்னோடியாக இருந்து செயல்பட்டு வருகிறார்” என்று பிங்காம்டன் பல்கலைக்கழகத் தலைவர் ஹார்வி ஸ்டெங்கர் கூறினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-12) அன்று விஐடி-யின் முன்னாள் மாணவர்கள் வாஷிங்டன் டிசி-இல் உள்ள ஆர்லிங்டன் பகுதியில் கூடி ஜி.விஸ்வநாதன் அவர்களைப் பாராட்டினர்.

இதில், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஸ்வநாதன், ”மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு செலவிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த 76 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது 3 சதவீதத்தை தாண்டியதில்லை. இந்த ஆண்டு அது இன்னும் குறைந்து 2.9 சதவீதமாக மாறியுள்ளது. இந்நிலையை மாற்ற மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக அமர்ந்து, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

Education

அனைத்து முன்னேறிய நாடுகளிலும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கல்விக்கென தனியாக ஒதுக்கீடு செய்கிறார்கள்.. இப்போதும் கூட புதிய கல்விக் கொள்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக செலவிடப்பட வேண்டும் என்று கூறுகிறது மத்திய அரசு. ஆனால், அதுமட்டும் போதாது, நாம் அதை இன்னும் அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் இன்று சுமார் 50,000 கல்லூரிகள் மற்றும் 1,100 பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவற்றில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தனியார் துறையில் உள்ளன. அரசு நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அரசு இன்னும் அதிகம் உதவ வேண்டும்.

கல்வி இல்லாமல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவது சாத்தியமில்லை. கல்வியால் மட்டுமே வளர்ந்த நாடாக மாற்ற முடியும்” என்றார். மேலும், கல்வித்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து பேசியவர், ”ஊழல் ஒரு தேசிய நோய். கல்வித்துறையிலும் அது இருப்பது வருத்தத்திற்குரிய செய்தி தான். ஊழலை ஒழிக்க  மாநில அரசுகள், மத்திய அரசு மற்றும் தனியார் துறை என அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்” என்றார்.

Education

அமெரிக்காவின் கல்வி நிறுவனத்திற்கும் இந்தியாவின் கல்வி நிறுவனத்திற்கும் உள்ள வேறுபாடாக அவர் கூறியது, “அமெரிக்காவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே எந்தவித பாகுபாடும் இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம், பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு அங்கு பயின்று செல்லும் முன்னாள் மாணவர்களிடமிருந்து நிதியுதவி பெறுகின்றன. இந்தியாவில் இம்முறை கிடையாது. இதனை அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.