உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி’ – குழந்தைகள் உற்சாகம்

கார்கிவ்: ரஷ்ய போருக்குப் பின்னர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பதுங்குகுழி பள்ளிக்கு (பங்கர் பள்ளி) வந்த குழந்தைகள் தங்கள் ஆசிரியர், நண்பர்களை சந்தித்து உற்சாகம் அடைந்தனர்.

இரும்புக் கதவுக்கு அருகில் இரண்டு ஆசிரியர்கள் நின்று அவர்களை வரவேற்க காங்கிரீட் படிகளுக்கு கீழே இருக்கும் குண்டு துளைத்த மற்றொரு கதவைக் கடந்து ஒரு தாயும், மகளும் உற்சாகமாக கையை ஆட்டியபடி அங்கிருந்த வகுப்பறைக்குள் நுழையும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

6 மீட்டர் ஆழத்தில்… உக்ரைனில் முதல்முறையாக பதுங்கு குழிக்குள் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளிக்கூடத்துக்கு நூற்றுக்கணக்காண குழந்தைகள் வருகை தந்துள்ளனர். ஆர்வத்துடன் தங்களின் பள்ளிப் பாடங்களைப் படிக்கத் தொடங்கி உள்ளனர். இந்தப் பதுங்கு குழி பள்ளிகள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

கார்கிவ் நகரின் நடைபாதையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய வெள்ளை கான்கிரீட் கதவுகள் வழியாக கீழே செல்லும் படிக்கட்டுகளில் இறங்கி நடந்து சென்றால் இந்தத் தொடக்கப்பள்ளியை அடைய முடியும். அந்தப் படிக்கட்டுகளின் இறுதியில் வரும் நீண்ட வளாகத்தில் இருந்து வகுப்பறைகள் தொடங்குகின்றன. அந்த வகுப்பறைகளில் ஜன்னல்கள் இல்லை. ஆனால் வெளிச்சத்துக்காக விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. சுவர்களில் வெள்ளை மற்றும் இளம்பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளன.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், நாட்டின் வடகிழக்கு பகுதியில் ரஷ்ய எல்லைக்கு அருகில் இருக்கிறது. கடந்த 26 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சமீப வாரங்களில் தாக்குதல் மேலும் இறுக்கம் அடைந்துள்ளது.

குழந்தைகள், பெற்றோர் உற்சாகம்: இந்தப் போர்க் காலத்தில் கார்கிவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தங்களின் கல்வியை இணையம் வழியாக கணினி மூலம் பயின்று வந்தனர். இந்தச் சூழ்நிலையில், 9 வயது மாஷாவும், 6 வயதான அவரது தம்பி ஒலேக்சீயும் நிஜ வகுப்புக்கு சென்று, ஆசிரியர்களையும், பிற மாணவர்களையும் பார்க்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அவர்களின் உற்சாகம் குறித்து குழந்தைகளின் தாய் மரினா பிரிஹோத்கோ கூறுகையில், “மூன்றாவது வகுப்பு படிக்கும் எனது மகள் பள்ளிக்குச் சென்று தனது நண்பர்களை பார்க்கும் அந்த நாள் வருவதற்காக காத்திருக்கிறாள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகனைப் பொறுத்தவரையில் ஆன்லைனில் இல்லாமல் நேரில் தனது வகுப்புத்தோழர்களை பார்க்க வாய்ப்புக்கிடைக்கும் அந்த நாள் ஒரு பண்டிகை நாளாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “சமீபத்தில் சண்டை அதிகரித்துள்ளது.பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும், வாழ்க்கை கடந்து கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் இங்கே இப்போதும், எப்போதும் வாழ முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்” என்றார் வேதனையுடன்.

தற்போதைய புதிய பள்ளியில் 300 பேர் வரை சேர்க்க முடியும். என்றாலும் கார்கிவ் நகர மேயர், இஹோர் தேரேஹோவ் கூறுகையில், “வரும் நாட்களில் ஒரு ஷிப்டுக்கு 450 பேர் படிக்கும் அளவில் ஒரு நாளில் இரண்டு ஷிப்ட்களாக விரிவுபடுத்தப்படும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவேண்டும் மேலும் செப்.1-ம் தேதி முதல் மாணவர்கள் முழுமையாக வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

பள்ளி திறந்த திங்கள்கிழமை அதனைக் கொண்டாடும் வகையில் பலர் உக்ரைனின் பாரம்பரிய உடையான எம்பிராய்டரி செய்யப்பட்ட சட்டை அணிந்து வந்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.