தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த தன் கணவனைக் காப்பாற்றும் வாய்ப்பை மனைவி இழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அம்ரிதா. அவருக்கு வயது 25. அம்ரிதா தன் குழந்தைகளுடன் கேரளாவில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணவர் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். திடீரென நம்பி ராஜேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதனையடுத்து மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்ரிதாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தன் கணவரைப் பார்க்க வேண்டுமென கடந்த 8ம் தேதி கேரளாவில் இருந்து மஸ்கட் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் புக் செய்திருக்கிறார் அம்ரிதா. ஆனால், அன்றைய தினம் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர். இதனால் 80க்கும் மேற்பட்ட விமானகள் ரத்து செய்யப்பட்டன. இதில் கேரளாவிலிருந்து மஸ்கட் செல்லவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான ஊழியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்த நிலையில் இது குறித்து அறியாத அம்ரிதா, மஸ்கட் செல்ல விமான நிலையம் வந்திருக்கிறார். அவரால் அன்று பயணம் செய்ய முடியவில்லை.
பின்னர், விமான நிறுவன ஊழியர்களிடம் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து, 9-ம் தேதி மஸ்கட் செல்ல ஏர் இந்தியா நிறுவனம் அம்ரிதாவுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. ஆனால், அன்றைய தினமும் விமான ஊழியர்கள் பணிக்கு வராததால் அன்றும் அவரால் தன் கணவரைக் காணச் செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிக்கு வந்த நிலையில் மஸ்கட் செல்ல அம்ரிதாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவரின் பயணம் ரத்தானது. மஸ்கட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் தான் நலமுடன் இருப்பதாகவும், மே 11 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அடுத்த இரண்டாம் நாளில் எதிர்பாராத விதமாக ராஜேஷ் உயிரிழந்திருக்கிறார். ராஜேஷ் உயிரிழந்தது குறித்து அவரின் மனைவி அம்ரிதாவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கணவன் மரணமடைந்த செய்தி கேட்ட அம்ரிதா கண்ணீர் விட்டு அழுது வருந்தியிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை உயிருடன் ஒருமுறையாவது நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற அம்ரிதாவின் எண்ணம் ஏர் இந்தியா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய அம்ரிதாவின் தாயார், “விமான நிறுவன ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் மஸ்கட்டை அடைவதற்கான எங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அவர் தன் மனைவியைப் பார்க்க விரும்புவதாக அருகிலிருந்தவர்களிடம் கூறியதால் உடனடியாக செல்ல முடிவு செய்தோம். ஆனால் விமானம் ரத்தானதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
விமான நிறுவனம் எங்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். என் மகள் அங்கு சென்றிருந்தால், அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது வழக்குத் தொடர அம்ரிதாவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகாக் கூறப்படுகிறது.