மதுரை: “கடந்த 3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கென அமைச்சர் உதயநிதி எத்தனை செங்கலை வைத்துள்ளார்?” என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் செல்லம்பட்டியில் அன்னதானம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம அவர் கூறியது: “கட்டுமான தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் உக்கிர உச்சத்தில் இருந்த போதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது அரசு விழித்து இருப்பது நமக்கு சிரிப்பு வருகிறது. கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழைப்பொழிவு இன்றி தமிழக அணைகளில் போதிய நீர் கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222 ஏக்கர் நிலத்தை எங்களது பொதுச் செயலாளர் 2018-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து பிரதமரை அழைத்து 2019-ல் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 18 சதவீதம் மத்திய அரசு நிதியும், 82% ஜெயிக்காவின் நிதியும் செயல்படுத்தப்பட்டன. சாலை , சுற்றுச்சுவர், உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்க பணி செய்து கொடுக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஒற்றை செங்கலை காட்டி உதயநிதி பிரச்சாரம் செய்தார். இந்த 3 ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டிடம் கட்ட எத்தனை செங்கலை வைத்துள்ளார்” என்று அவர் பேசினார்.