புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை வரும் மே 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் தற்போது குறைந்து, ஒருசில பகுதிகளில் மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை வரும் மே 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவில்லை. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை இம்முறை மே 31ஆம் தேதி தொடங்குவதால் இது கிட்டத்தட்ட வழக்கத்தைப் போன்ற நிகழ்வுதான் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்று இந்தியாவின் விவசாயத்துக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் வருடாந்திர பருவமழையை கொண்டு வர உதவுகிறது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த பருவமழை பொழிவு நிகழ்கிறது.
தென்மேற்குத் திசையில் இருந்து வரும் வீசும் காற்று ஜூன் தொடக்கத்தில் கேரளாவுக்கு மழைப் பொழிவை கொண்டு வருகிறது. இது செப்டம்பர் இறுதிவரை நீடிக்கும். இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை நான்கு நாட்கள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.