நாசிக்: “காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது அரசு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க விரும்பியது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், மதத்தின் அடிப்படையில் பட்ஜெட், வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கில் உள்ள நாசிக் மாவட்டத்தின் பிம்பல்கான் பஸ்வந்த் பகுதியில், மஹாயுதி வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பாரதி பவார் (பாஜக), ஹேமந்த் கோட்சே (சிவசேனா) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பட்ஜெட்டை மத அடிப்படையில் பிரிப்பது மிகவும் ஆபத்தானது. இந்திய அரசியலமைப்பின் சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு எதிராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சி தனது முந்தைய ஆட்சியின்போது, நாட்டின் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க திட்டமிட்டது. அப்போது நான் குஜராத்தின் முதல்வராக இருந்தேன். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்படி ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி மீண்டும் அந்த திட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறது.
சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் காவல்காரன் (chowkidar) மோடி. அவர்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். இந்த மக்களவைத் தேர்தல் என்பது நாட்டுக்காக உறுதியான முடிவுகளை எடுக்கும் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கானது. கடந்த பத்து ஆண்டுகளில் எனது அரசு ரேஷன், தண்ணீர், மின்சாரம், வீடு மற்றும் எரிவாயு இணைப்பு போன்றவைகளை மத வேறுபாடின்றி இலவசமாக வழங்கியுள்ளது. அனைவருக்கும் வளர்ச்சி திட்டங்களை வழங்கியது” என்று பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவாரின் பெயரினைக் குறிப்பிடாமல் அவரை சாடினார். அவர் “மகாராஷ்டிராவில் உள்ள இண்டியா கூட்டணியின் தலைவருக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மோசமாக தோற்கும் என்பது தெரிந்திருக்கிறது. எனவே, அவர் சிறிய கட்சிகளை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும். அதன்மூலம் எதிர்க்கட்சியாக இணைந்து நிற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
போலி சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) காங்கிரஸுடன் இணைக்கப்படும்போது நான் பால் தாக்கரேவை நினைத்துக் கொள்வேன். காலஞ்சென்ற அந்தத் தலைவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பிரிவு 370 ரத்து செய்யப்படுவது குறித்தும் கனவு கண்டார்” என்றார் பிரதமர் மோடி.