கொல்கத்தா: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் செரம்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “இந்த தேர்தலானது இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கும், நேர்மையான அரசியல்வாதி நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடக்கும் தேர்தல். பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருந்த போதிலும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை.
2019-ல் 370-வது பிரிவை ரத்து செய்த பிறகு காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது. 2019-ஆம் ஆண்டு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, அதுவரை மாநிலமாக இருந்த ஜம்மு – காஷ்மீரில் கற்கள் வீசப்பட்டன. இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கற்கள் வீசப்படுகின்றன. ஊடுருவல்காரர்கள் வேண்டுமா அல்லது குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டுமா என்பதை மேற்கு வங்க மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஜிஹாத்துக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸுக்கு (வளர்ச்சி) வாக்களிக்க வேண்டுமா என்பதை மேற்கு வங்க மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருக்கிறது என கூறி வருகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்றார்.
முன்னதாக, தெலங்கானாவின் விகாராபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “இந்திய பாதுகாப்பு குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஏளனமாக பேசி வருகிறார். நம் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் தைரியம் காங்கிரஸுக்கு உள்ளதா?
அத்துமீறி நமது நாட்டின் எல்லையில் நுழையும் எதிரி நாட்டினரை நம்முடைய ராணுவ வீரர்கள் துவம்சம் செய்துள்ளனர். அவர்களை ஓட ஒட விரட்டி அடித்துள்ளோம். 3-வது முறையாக மோடி பிரதமர் பதவியேற்றதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கண்டிப்பாக மீட்கப்படும்.
காஷ்மீர் என்றென்றும் நம்முடைய நாட்டின் ஓர் அங்கம்தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதிகள் காப்பாற்றப்பட்டு வந்தனர். ஆனால், தீவிரவாதத்தை பிரதமர் மோடி வேரோடு அழித்துள்ளார்” என்று பேசியிருந்து குறிப்பிடத்தக்கது.