புதுடெல்லி: உடலுக்கு இரும்புச் சத்து வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல் தொடர்பாக 17 புதிய விதிமுறைகளை கூறியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பல வகை உணவு மற்றும் வழக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவற்றில் கூறியிருப்பதாவது:
இந்திய கலாச்சாரத்தில் டீ, காபி ஆகிய இரண்டு பானங்களுமே முக்கிய இடத்தில் உள்ளன. இந்த இரண்டிலுமே கஃபைன் என்ற பொருள் உள்ளது. இவை நரம்பு மண்டலத்தை தூண்டக் கூடியது. ஒரு கப் காபியில் 80 முதல் 120 மில்லி கிராமும், தேநீரில் 30 முதல் 65 மில்லி கிராமும் கஃபைன் உள்ளது. நாள் ஒன்றுக்கு நமது உடலில் செல்லும் கஃபைன் 300 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.
இந்த காபி, டீயை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும், சாப்பிட்டபின்பு ஒரு மணி நேரம் வரையும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள டேனினின்ஸ் என்ற ரசாயனம், உணவில் உள்ள இரும்புச்சத்துடன் இணைகிறது. இதனால் உடம்புக்கு தேவையான இரும்புச் சத்து சரியாக உறிஞ்சப்படுவதில்லை. இது இரும்புசத்து குறைபாடு, ரத்தச் சோகை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
மேலும், காபியை அதிகம் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய பிரச்சினைகள் ஏற்படலாம். பால் கலக்காத டீதான் உடலுக்கு நல்லது. இதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படும். இதய பிரச்சினைகள், வயிற்றில் கேன்சர் போன்ற அபாயம் குறைவு.
ஊட்டச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கடல் உணவு பொருட்கள், கொழுப்புச்சத்து குறைந்த மாமிசங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சமையல் எண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.