'மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆவார்' – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் நம்பிக்கை

வாஷிங்டன்,

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சஜித் தரார். இவர் கடந்த 1900-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர் பாகிஸ்தானின் அரசியல் வட்டாரத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்பார் என சஜித் தரார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“மோடி ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அவரிடம் இயல்பாகவே தலைமைப் பண்பு உள்ளது. பாதகமான ஒரு சூழ்நிலையில், தனது அரசியல் மூலதனத்தைப் பணயம் வைத்து பாகிஸ்தானுக்குச் சென்ற பிரதமர் அவர்தான். பாகிஸ்தானுடன் மோடி பேச்சுவார்த்தை மற்றும் வர்த்தகத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானில் அமைதி நிலவினால் இந்தியாவுக்கும் நன்மை ஏற்படும். மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கு மோடிக்கு இருக்கும் பிரபலத்தையும், 2024-ல் இந்தியாவின் எழுச்சியையும் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இது நிச்சயமாக எதிர்காலத்தில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையாகும். இந்தியாவின் ஜனநாயகத்தில் இருந்து உலக மக்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள். இந்தியா அதன் இளம் மக்கள்தொகையால் பயனடைகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட பாகிஸ்தானின் பல பகுதிகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை, மின் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளன. ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின்கட்டண உயர்வு காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் ஏற்றுமதியை அதிகரிப்பது. பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வருவது, மற்றும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது உள்ளிட்ட அடிமட்ட பிரச்சினைகளை தீர்க்க எந்த முயற்சியும் இல்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து விலகி அடுத்த கட்டத்திற்கு பாகிஸ்தானை கொண்டு செல்லும் தலைமை எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.