புதுடெல்லி,
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் தற்போது குறைந்து, ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு திசையில் இருந்து வரும் வீசும் காற்று ஜூன் தொடக்கத்தில் கேரளாவுக்கு மழைப் பொழிவை கொண்டு வருகிறது. இது செப்டம்பர் இறுதிவரை நீடிக்கும். இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் ஆய்வு தெரிவித்துள்ளது.