சண்டிகர்: “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியை எதிர்த்து போராட்டம் கூட மேற்கொள்வதில்லையே! அது ஏன்?” என அந்த மாநில பாஜக தலைவர் சுனில் குமார் ஜாக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, ஷிரோமணி அகாலி தளம் போன்ற கட்சிகள் தன்னிச்சையாக மாநிலத்தில் போட்டியிடுகின்றன.
இதில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க தொகுதிக்கு செல்லும் இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜகவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இந்த சூழலில்தான் அந்த மாநில பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் இதை தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20,000 தருவோம் என மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு தெரிவித்தது. ஆனால், விவசாயிகளுக்கு கொடுத்தது ரூ.6,800 மட்டுமே. அதுவும் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்த தொகை. ஏன், முதல்வர் பகவந்த் மானை எதிர்த்து போராட்டம் மேற்கொள்வதில்லை.
விவசாயிகளின் நலன் சார்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வேளாண் பட்ஜெட் சார்ந்து ரூ.25 லட்சம் கோடி அறிவித்துள்ளது. ஆனால், தங்களது தோல்வியை மறைக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மக்களிடையே கட்டுக் கதைகளை சொல்லி வருகின்றன” என அவர் தெரிவித்தார்.