சென்னை: பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியாதாக திமுக பிரமுகரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கடுமையாக விமர்சித்த ராதிகா, தனது எக்ஸ் தளத்தில், “சிறைக்குச் சென்றும் அவர் திருந்தவில்லை. இவரைப்போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்தில், தன்னையும், தனது கணவரையும் அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே 16) புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.