காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடையா? – அரசு மறுப்பு

சென்னை: உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை” என்ற 16.05.2024 நாளிட்ட செய்தி, பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழக அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்துக்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை” என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட செய்தி பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழக அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழக அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழக அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.