`ஆண்களுக்கான தேசிய ஆணையம் கொண்டுவருவோம்!' – ஆண்களுக்காக தேர்தலில் களமிறங்கியிருக்கும் MARD கட்சி

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் களம் என்பது பற்றியெரியும் நெருப்பு உச்சத்தை எட்டுவது போல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய கண்கள் சர்ச்சையான பேச்சுகள், விவாதங்கள், தேர்தல் களம் என்று கவனித்து வரும் நிலையில் ஆண்களுக்காக ஒரு கட்சி இந்தத் தேர்தலில் களமிறங்கியிருப்பது நம் கவனத்துக்கு வந்திருக்கிறது. அந்தக் கட்சியின் பெயர் `மேரா அதிகார் ராஷ்ட்ரிய தால் (MARD)’. முழுக்க முழுக்க ஆண்கள் நலனுக்காக 2009-ல் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகக் கட்சியினர் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

முக்கியமாக வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் போலி வழக்கில் மாட்டிக்கொள்ளும் ஆண்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் இந்த கட்சி பயணித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்சி இதுவரை மொத்தமாக ஏழு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறது. ஆனால், போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் இந்தக் கட்சி டெபாசிட் இழந்திருக்கிறது. இருப்பினும், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் களம் இறங்கி இருக்கும் இந்தக் கட்சி, லக்னோ, கோரக்பூர், ராஞ்சி போன்ற தொகுதிகளில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.

மேலும், தங்களின் வாக்குறுதியாக தாங்கள் வெற்றிபெற்றால் `ஆண்கள் நலன் அமைச்சகம்’, `ஆண்களுக்கான தேசிய ஆணையம்’ போன்றவற்றைக் கொண்டு வருவோம் எனத் தங்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

போட்டியிடுவது குறித்து பேசிய MARD கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், லக்னோ தொகுதியின் வேட்பாளருமான கபில் மோகன் சவுத்ரி, `என்னுடைய முதல் திருமணத்தின் மூலம் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால், என்னுடைய முன்னாள் மனைவி இரண்டு குழந்தைகளையும் என்னிடமிருந்து பிரித்துக் கொண்டுசென்றுவிட்டார்.

MARD கட்சி

அதன்பிறகு, என்மீது வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் பொய் வழக்கு போடப்பட்டது. 1999-ல் தொடரப்பட்ட வழக்கு இன்னும் அது நிலுவையில்தான் இருக்கிறது. எனக்கு விவாகரத்து கிடைத்தும்கூட என்மீதான வரதட்சணை கொடுமை வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. லக்னோவில் இந்த வழக்குகளை எதிர்த்துப் போராடும்போது, ​​இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பலரைச் சந்தித்தேன். அதனால், ஆண்களின் உரிமைக்காக இந்த கட்சியைத் தொடங்கினோம்” என அவர் பேசினார்.

இவர் 2011-ல் மறுமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரைத் தவிர இந்தக் கட்சியிலிருந்து கோரக்பூர் தொகுதியில் சோனு ராய் என்பவரும், ராஞ்சி தொகுதியில் தனஞ்சய் குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.