கொல்கத்தா: மம்தா பானர்ஜியை தான் நம்பவில்லை என்றும், அவர் பாஜகவை ஆதரிப்பார் என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், திரிணமூல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று கூறி இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அந்த அரசில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்காது. மாறாக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். அரசின் மசோதாக்களுக்கு ஆதரவாக எங்கள் எம்பிக்கள் வாக்களிப்பார்கள்.
400+ தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று பாஜக கூறி வருகிறது. அது நடக்காது என்று மக்கள் கூறுகிறார்கள். திருடர்கள் மட்டுமே இருக்கக்கூடிய கட்சிதான் பாஜக என்பதே நாட்டு மக்களின் புரிதலாக உள்ளது. மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, காங்கிரஸும், சிபிஎம்-மும் பாஜகவோடு இணைந்து செயல்படுகின்றன.
மேற்கு வங்கத்தில், எங்கள் தாய்மார்களும், சகோதரிகளும் எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருக்க, நாங்கள் இண்டியா கூட்டணிக்கு வெளியில் இருந்து எங்கள் ஆதரவை வழங்குவோம். அதோடு, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களும் பிரச்சினைகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்று கூறி இருந்தார்.
மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “மம்தா பானர்ஜியை நான் நம்பவில்லை. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அக்கட்சியை திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்கும். மம்தா பானர்ஜிக்கு எதிராக மிகப் பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்க அவர் ஏற்கனவே வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.